அல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் – பின் நவீனத்துவ ரகளை

தமிழக இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடந்தது அல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா.

முன்பு ஒருவர் சாருவின் மீது கொண்ட பொறாமையை மனதில் வைத்து மட்டம்தட்டி வந்தார். ஆண்டுக்கு 80 புத்தகங்கள்தான் விற்கின்றன என கணக்கு காட்டி ஏமாற்றினார்.

அவர் ஒட்டு மொத்தமாக விற்ற புத்தகங்களின் எண்ணிக்கையை விட , விழா அன்று விற்ற புத்தகங்களின் எண்ணிக்கை பல மட்ங்கு அதிகம். இந்திரா பார்த்தசாரதி பாராட்டு மழையில் புத்தகத்தை நனைத்தார். பேசி முடிந்து இருக்கைக்கு திரும்பியவர், மீண்டும் எழுந்து வந்து பாராட்டினார்.

பேசும் ஐடியா இல்லாமல் வந்த மதன், சாருவின் வேண்டுகோளுக்கிணங்க, குறிப்புகள் ஏதும் இல்லாமல் மனமார நாவலை பாராட்டினார். இப்படி எத்தனையோ சாதனைகளை வெளிவரும் முன்பே எக்சைல் செய்தது

ஆனால் ஒரு வாசகன் படிக்க ஆரம்பிக்கும்போது, இந்த அம்சங்கள் எல்லாம் அவன் கணக்கில் வராது. தன் கையில் தவழும் புத்தகம் , அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா இல்லையா என்பதே கேள்வி.

எனவே விருப்பு , வெறுப்பு என்றி இந்த நாவலை அலசுவது நம் கடமை. இந்த நாவல் என்ன சொல்கிறது? எப்படி சொல்கிறது? ஒரு சாராசரி வாசகனின் பார்வையில் நாவல் எப்படி இருக்கிறது?

பார்க்கலாம்..

முதலில் ஒன்று சொல்லி விடுகிறேன். இது வரை வந்த தமிழ் நாவல்களில் இது சற்றே வேறுபட்டது.

இது ஒரு த்ரீ இன் ஒன் நாவல். இதை நீங்கள் ஒரு கட்டுரைத்தொகுப்பாக படிக்கலாம்.. சுய சரிதையாயாக படிக்கலாம். அல்லது நாவலாகப் படிக்கலாம்.. எப்படி படித்தாலும், சுவாரஸ்யமாகவும் பலன் மிக்கதாக இருக்கும் என்பதே இதன் சிறப்பு.

கட்டுரை தொகுப்பாக படித்தால் ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன, வாழ்வில் வெற்றி பெறும் சூத்திரங்கள், மருத்துவ குறிப்புகள், வயகாரவை மிஞ்சும் வீரிய விருத்து லேகியம் சில சமையல் குறிப்புகள், முக்கிய புத்தங்கள் பட்டியல், ஆன்மீக குறிப்புகள், சித்தர் பற்றிய குறிப்புகள், தரிசிக்க வேண்டிய ஆலயங்கள், தரிசிக்க வேண்டிய முறைகள், இஸ்லாமிய சுஃபி மகான் பற்றிய குறிப்புகள் , மது வகைகள் , பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் என ஒவ்வொரு பக்கமும் தகவல் சுரங்கம். அம்ர்ந்தால் ஒரே மூச்சில் அரை நாளில் படித்து விடலாம்.

சுய சரிதையாக படித்தால், ஓர் எழுத்தாளனின் உழைப்பு , அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என ஒரு சர்வதேச தரத்திலாம சுயசரிதை புத்தகம் படித்த திருப்தி கிடைக்கும்.,, ஆனால் இது முழுமையான சுய சரிதை நூல் அன்று என்பதால், இந்த கோணத்தில் படிப்பது நாட் ரெகமெண்டட்.

இந்த கோணத்தில் படித்தாலும், ஒரே அமர்வில் படித்து முடிக்கலாம்

நாவல் என்ற கோணத்தில் படித்தால்தான் , எக்ஸைலின் முழு வீச்சயும் உள்வாங்க முடியும். ஆனால் இப்படி படித்தால் அரை நாளிலெல்லாம் படிக்க முடியாது, படிக்கவும் கூடாது. காரணம் இந்த நாவல் வாசகனின் உழைப்பையும் கோருகிறது. சவால் விடுகிறது. நாவலை ஆரம்பித்தால் ஜெட் வேகத்தில் செல்லும்தான். ஆனால் கஷ்டப்பட்டு பிரேக் போட்டு நிறுத்தி ஆங்காங்கு சற்று எழுத்தை முழுமையாக உள்வாங்க வேண்டும். நானெல்லாம் சிலவற்றை நிபுணர்களுடன், நண்பர்களுடன் பல பகுதிகளை விவாதித்த பின்பே அடுத்த பகுதிக்குள் சென்றேன்.

உதாரணமாக ஓர் இடத்தில், லக்காம் சொல்லும் woman does not exist கோட்பாடு பற்றி தெரியுமா என கேட்டு விட்டு நாவல் தொட்ரகிறது. அந்த கோட்பாடு தெரியவில்லை என்றால் , அது என்ன என தெளிவு படுத்திக்கொண்டு நாவலை தொடர்ந்தால்தான் நல்லது. சும்மா ஸ்கிப் செய்து விட்டு சென்றால் அந்த பகுதியின் அர்த்தம் சரிவர புரியாது மேலோட்டமாக படித்தாலும் நன்றாக இருக்கும்தான். ஆனால் இப்படி படித்தால் சாரத்தை இழந்து விடுவோம்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறோம். மீன் பிடித்து திரும்பி விடலாம். இன்னும் கொஞ்ச தூரம் போனால் , விலை உயர்ந்த பொக்கிஷங்கள் கிடைக்கும் என்றால் , கூடுதல் எஃபோர்ட் கொடுக்கலாம் அல்லவா? எது போல கொஞ்சம் எஃபோர்ட் கொடுத்தால், நாவலில் பல புதையகல்கள் அள்ளலாம்.

எக்சைல் என்ற பெயரே ஆழமான அர்த்தம் கொண்டது. நாடு கடத்தப்படல் என்பது இதன் பொருள். மரண தண்டனையை விட கொடுமையானது இது. பல சந்தர்ப்பங்களில் நாடு கடத்துதல் என்பது நேரடியாக இருக்காது. படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறீர்கள். வீட்டில் அவமானப்படுத்துகிறார்கள் என்றால் வீடை விட்டு வெளியேறுவீர்கள். அது ஒருவகை எக்சைல்தான்.

மயக்கம் என்ன படத்தில் தனுஷ் அனுபவிப்பது ஒரு வகை எக்சைல்தான். அதே போல தமிழ் நாட்டில், எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், சொந்த நாட்டுக்குள்ளேயே எக்சைல் வாழ்க்கை வாழ்கின்றனர் என்பது ஒரு கோணம். ஒரு நடிகனுக்கோ , அரசியல் தலைவனுக்கோ பால் அபிஷேகம் செய்கிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள், யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

ஓர் எழுத்தாளனுக்கு அப்படி செய்ய நினைத்தால் தொலைத்து விடுவார்கள். எழுத்தாளன் என்றால் அடங்கி இருக்க வேண்டும்,. அவனுக்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம். ஆச்சாரம் கெட்டு விட்டது என ரகளையே நடக்கும். ( இதை மீறும் பொருட்டு, இலக்கியவாதிகளின் அடையாளத்தை பிரதிபலிக்கும் ஆடையை சாரு தவிர்த்து விட்டு, வேறோர் உடையில் விழாவில் தோன்றியதை பார்த்து இருப்பீர்கள் )

இப்படிப்பட்ட சமூகத்தில் , சொந்த நாட்டிலேயே , நாடு கடத்தப்பட்டவன் போல வாழும் உதயா என்ற எழுத்தாளனின் கதைதான் எக்ஸைல்.

ஆனால் இது அவன் கதை மட்டும் அன்று. அவன் கோணத்தில் மட்டும் கதை சொல்லப்படுவதில்லை. தன் வீட்டிலேயே அடக்குமுறையை சந்திக்கும் அஞ்சலி, ஆதிக்க சாதியில் பிறந்த ஒருவன் , குப்பை அள்ளும் வேலையில் , ஏமாந்து போய் சேரும் நிலை, உதயாவின் மகள், அஞ்சலியை காதலிக்கும் உதயா ஒரு கட்டத்தில் தானே அவளை அடக்குமுறைக்கு உட்படுத்த நினைக்கும் வினோதம் , காரணமே இல்லாமல் துன்புறுத்தப்படும் சொறி நாய், தற்கொலைக்கு தூண்டப்படும் பூங்கொடி , சிறுவர்களின் விளையாட்டால் அல்லல்படும் வளர்ப்பு நாய் என பல்வேறு பாத்திரங்கள். ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை. ஒரு விதத்தில் இவர்களும் கூட புகலிட வாழ்வுதான் வாழ்கிறார்கள்.

ஒருவரை எந்த காரணமும் இல்லாமல் துன்புறுத்துவதை பல இடங்களில் பார்க்கிறோம். அன்பை போதிக்கும் ஆன்மீக வாதிகள்கூட அடக்குமுறையை பயன்படுத்துவதை நாவல் சுட்டிக்காட்டுகிறது..

இதை எல்லாம் பார்த்தால் , நாவல் ரொம்ப சீரியசாக இருக்குமோ என நீங்கள் நினைக்கலாம். அதுதான் கிடையாது. நாவலின் துவக்க பகுதியில் இருந்து , கிளைமேக்ஸ் வரை, துள்ளல்தான், ரகளைதான் , கொண்டாட்டம்தான். பொது இடங்களில் அமர்ந்து படிக்காதீர்கள். படித்தால் சிரிப்பை அடக்க முடியாது. எல்லோரும் உங்களை வினோதமாக பார்ப்பார்கள்.. குறிப்பாக 66 , 67 பக்கங்களை சிரிக்காமல் படிப்பவர்களுக்கு விருது கொடுக்கலாம்.

செம கிண்டல்.

ஆரூர் சிம்மன் சாமான்ய ஆள் அல்ல. மூன்று தமிழ்களுக்கு வேந்தராக கருதப்படும் அவர் தமிழ் மொழிக்கு ஆற்றி இருக்கும் தொண்டை ஃபெர்னினான்ந்த் தெ சஸூரோடும் , க்ளோத் லெவி ஸ்த்ராஸோடும் மட்டுமே ஒப்பிட முடியும்” என ஆரம்பித்து..

அப்போது முத்தமிழ் அறிஞர் செய்த ஒரு காரியத்தை நெல்ஸன் மண்டேலா கூட யோசித்து பார்த்து இருக்க மாட்டார் ” என்றும் “ அப்பாவித் தமிழ்ர்கள் மேல் ராணுவத்தாக்குதல் தொடர்ந்தது. இது பற்றி முத்தமிழ் அறிஞரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதிலில்தான் நீங்கள் அவர் தமிழ் அறிவை புரிந்து கொள்ள வேண்டும் .அவர் சொன்னார் “ மழை விட்டும் , தூவானம் விடவில்லை . இப்பேர்பட்ட கீர்த்தியை கொண்ட முத்தமிழ் அறிஞருக்கும், கவிச்சக்கரவர்த்திக்கும் இடையேதான் இந்த ஆண்டின் பாரதிய ஞான பீட பரிசுக்கு போட்டி. உண்மையில் இதை நீங்கள் பாப்லோ நெரூதாவுக்கும் க்ளோத் லெவி ஸ்த்ராஸுக்கும் இடையேயான போட்டியாகவே எடுத்து கொள்ள வேண்டும் . இத்தகைய பின் நவீனத்துவ காமெடி நாடக சூழலில் “ என்று இரண்டு பக்கங்க்ளுக்கு பகடி என்றால் என்ன பாடம் எடுத்திருக்கிறார் சாரு.

இதை டைப் செய்யும்போது கூட என்னால் சிரிப்பை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.

நடிகர் கமல் ஹாசனை ஆரம்பத்திலேயே கிண்டல் செய்து முடித்து விடுகிறார்.

சொய்ங் வாத்தியார், நிதானமில்லாமல் தண்ணி அடித்து விட்டு மணலில் கவிழ்ந்து கொள்ளும் ஞானம், கன்னமிட்டு என்று சொல்லி குழப்பும் விலை மாது, நாவலில் கலக்கும் கொக்கரக்கோவுக்கே பெப்பே காட்டும் சூப்பர் கொக்கரக்கோ, கொக்கரக்கோ கொடுக்கும் வினோத தண்டனை, BJ என்ற குட்மார்னிங் மெசேஜ், “ பாக்க முடியுது… முடியுது.. தூக்க முடியலயே என்ற அங்கலாய்ப்பு , பொது இடத்தில் உள்ளாடை அணியாமல் வந்த நடிகையை தொட மறுக்கும் பக்கிரி சாமி , முல்லா கதை , அரசர்- ஆடு மேய்ப்பவன் கதை , உறங்காவில்லி, கருவூரார், தந்தைக்கு எழுதும் ஆபாச கடிதம் என ரகளை செய்து இருக்கிறார் சாரு. சீரோ டிகிரியில் பயன்படுத்திய அவரது மேஜிக் எழுத்தை நாம் காணும் இடம் ஓன்று வருகிறது. அப்பப்பா. கிளாஸ். சதிப்பின்னலுக்குள் உதயாவை சிக்க வைக்கும் இடமும் , புராண சம்பவமும் இணைந்து ஓர் இடம் வரும். படிக்கும்போது வித்தியாசமான உணர்வை தரும். நாவலின் முக்கியமான் இடங்களில் ஒன்று இந்த பகுதி. திவாகர், பெரியார் படத்தை வைத்து இருக்கும் குருசாமி, நாய் கலவியை விடியோ எடுப்பவன் ( என் எடுக்க வேடனும் என்பதற்கு காரணம் இருக்கிறது , சிவா, கருவூரார் என ஒவ்வொரு கேரகடரும் நம் கண் முன் நடமாடுவது அவரின் எழுத்துக்கு வெற்றி இதை பாருங்கள் மது பான விருந்தின்போது ஒரு நண்பர் போர்ட்டிகோவிலேயே மூத்திரம் போனார். போதையாம். என்னங்கடா இது ? அதற்கு அட்டகாசமான பின் நவீனத்துவ விளக்கம் வேறு கொடுத்தார், அவர் அறையில் கிச்சன் , ஹால் , டாய்லெட் எல்லாம் அருகருகில் இருக்குமாம் . அந்த பழக்கத்தில் போய் விட்டாராம். சீரியசான ஒரு கதைக்களனை எடுத்து கொண்டு , பக்கத்துக்கு பக்கம் ரகளை செய்துள்ளார் சாரு. அஞ்சலியின் கதை மனதை உருக்குகிறது. வழக்கமாக , கதாசிரியர்கள் அஞ்சலியின் பார்வையில் இருந்தேதான் அனைத்தையும் பார்ப்பார்கள். ஆனால் , அஞ்சலி அதுவரை சொன்ன சம்பவங்களை , கொக்கரக்கோ தன் பாணியில் கிளைமேக்ஸில் சொல்லும் போது ஒட்டு மொத்தமாக வேறொரு பார்வை நமக்கு கிடைக்கிறது. ( மொத்தம் ஐந்து கிளைமேக்ஸ் ) ஆனால் யார் சொல்வது சரியான பார்வை என கதாசிரியர் எந்த முடிவையும் நம் மேல் திணிக்கவில்லை. ஒரு சம்பவம் நடக்கும்போதே இன்னொரு கோணத்தையும் சொல்லி , காலம் வெளி தர்க்கம் என அனைத்தையும் கடந்து செல்கிறது நாவல். உதாரணமாக அய்யப்பன் அருளால் ஒரு மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. ஆனால் அதே அய்யப்பன் கோயிலில் விபத்தும் நடக்கிறது. இரண்டையும் வெளிப்படையாக சொல்வது சூப்பர். அதே போல, சிலர் செய்த தவ்றுகளுக்கு பாம்பு தகுந்த பாடம் புகட்டுகிறது. ஆனால் இன்னொரு பகுதியில் எந்த தவறுமே செய்யாமல் பலர் துன்புறுகிறார்கள். சிவா குறித்து உதயா சொன்னது அனைத்தும் பொய் என கொக்கரக்கோ சொல்லும்போது, நாவலின் முழு வீச்சு புரிகிறது.. பக்கிரிசாமி எனும் ஆவி சொல்லும் கதை , கேசவன் எனும் யானையின் கதை என எத்தனை முறை படித்தாலும் திகட்டாத எண்ணற்ற விஷயங்கள் நாவலில் புதைந்துள்ளன. ******************************************************************* சரி..எனக்கு பிடித்த சில வரிகள்

 • அங்கே தத்துவவாதி என்றால் மிஷல் ஃபூக்கோ. இங்கே கமல்ஹாசன்,.காரணம் அவர்தான் சினிமாவில் நிறைய தத்துவங்கள் உதிர்க்கிறார்.
 • நீ பேண்டீஸ் போடு , போடாமல் இரு , அது உன் இஷ்டம், ஆனால் என் கோபம் என்னவென்றால்….
 • இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி , சஞ்சய் காந்தி ஆவிகள் இங்குதான் அலைகின்றன. ஆனால் எனக்குதான் அவர்களை சந்திக்க ஆர்வம் இல்லை. எங்கள் கட்சியை ஒழித்து கட்டிய கட்சியை சேர்ந்த ஆவிகள் ஆயிற்றே
 • முன் பின் தெரியாத ஒரு பெண்ணுடன் ( டபுள் மீனிங்தான் )எப்படி சாட் செய்ய வேண்டும்
 • கார்னிவலை எங்க ஊர்ல நடத்துங்க, எங்க ஊர்ல நடத்துங்க என சில வாச்கர்கள் யோசனை கூறினர். சரி நீங்க பொறுப்பு எடுத்து செய்ங்க என்றதும் அந்த பேச்சு நின்ற்து
 • சிவாஜியின் காதலிகள் அவருக்கு துரோகம் செய்து விட்டு, இன்னொருவரை கல்யாணம் செய்து கொள்ளும்போது, அந்த திருமணத்தில் பியானோ வாசிப்பார் சிவாஜி.அட அடா.. அப்படி ஒரு நடிப்பை மார்லன் பிராண்டோவால் கூட நடிக்க முடியாது
 • துறவை துறவுக்காக விரும்பி ஏற்பது வேறு. ஏதோ ஒன்றை வெறுத்து போய் இதை தேர்ந்தெடுப்பது வேறு
 • நானும் வாயே திறக்காமல் அழுத்தமாக இருக்கிறேன் ( என்னது . வாயே திறக்க மாட்டீர்களா – அடிப்பாவிகளா ! – கொக்கரக்கோ ) இந்த கொக்கரக்கோதான் நாவலின் ஹீரோ. இது போல அடிக்கடி கமெண்ட் கொடுப்பார்
 • கலவி என்பது சிறிய மரணம் ( la petit mort ) ” நான்
 • கடவுளை நம்புபவன். நம்பாதவன் மாதிரி நடிக்கிறேன். இல்லாவிட்டால் இந்தியாவில் எழுத்தாளனாக ஜீவிக்க முடியாது “
 • நம்முடைய மனதையும் , குணாம்சத்தையும், சிந்தனை போக்கையும் நிர்ணயிப்பதில் நாசிக்கு பெரும் பங்கு இருக்கிறது
 • எத்தனையோ தீர்த்தங்களை கண்டு வெற்றி கொண்ட கொக்க்ரக்கோவுக்கு, தன் கையில் இருக்கும் தக்கினியூண்டு தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை *********************************************
 • பிளஸ் துள்ளல் நடை புதுமையான வடிவம் சமகால பிரச்சினையை அலசுவது ஏராளமான தகவல்கள் வாசகனை யோசிக்க வைப்பது நகைச்சுவையின் உச்சத்தை தொட்டு இருப்பது
 •  மைனஸ் ஃபிரெஞ்ச் கவிதைகள் வரும் இடங்கள் கதை வேகத்தை தடுக்கின்றன ( என் போன்ற தற்குறிகளுக்கு தமிழைத்தவிர வேறு ஏதும் தெரியாது ) சாட் விவகாரத்தில் , கதானாயகனை சிக்க வைக்கும் பெண்ணின் மோட்டிவ் குறித்து சரி வர விளக்கவில்லை. அந்த பெண்ணுக்கும் , கதானாயகனுக்கும் முன் விரோதம் இல்லை. யாரோ தூண்டி விட்டு தான் இது நடந்து இருக்கும். அந்த சதிகாரன் யார் என்பது விளக்கப்படவில்லை ***********************************************
 • வெர்டிக்ட் தமிழ் வாசிக்க தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நாவல் ( குழந்தைகள் படிக்க கூடாது ) எக்சைல்- குறி தவறாத மிஸைல்
Advertisements
This entry was posted in புத்தகம் and tagged . Bookmark the permalink.

One Response to அல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் – பின் நவீனத்துவ ரகளை

 1. XXXXXXXXXX says:

  சாருகிட்ட எவ்வளவு பணம் வாங்கினே ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s