கவரிமான் தற்கொலை செய்யுமா? – ஆச்சரியமூட்டும் தகவல்கள்

இதன் அடிப்படையில் கவரிமான் என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது…

சிவாஜி கணேசன் , ஸ்ரீதேவி நடிக்க எஸ் பி முத்துராமன் இயக்கி இருந்தார்… இசைஞானி இசை.. அதில் ஒரு பாடலை நான் அவ்வப்போது கேட்டு ரசிப்பதுண்டு..

 


 

 

இப்போது பஞ்சாயத்து அந்த பாடல் குறித்து அல்ல…

 

கவரிமான் எங்கு வசிக்கிறது? முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா? எப்படி தற்கொலை செய்து கொள்ளும்?

 

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின்

என்கிறார் வள்ளுவர்..( 969ம் குறளில் )

 

கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்..

ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே ?

குழப்பமாக இருக்கிறது அல்லவா?

அந்த குறளை கவனமாக பாருங்கள்..

அதில் சொல்லப்ப்ட்டு இருப்பது கவரி மான் அல்ல..

கவரி மா…

ஆம்.. கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது..

அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்..

புறனானூற்றில் இது குறித்த குறிப்பு இருக்கிறது..

 

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

தண் நிழல் பிணி யோடு வதியும்

வட திசை யதுவே வான் தோய் இமயம்…


இமயமலை பகுதியில் , கவரிமா என்ற விலங்கு நரந்தை எனும் புல்லை உண்டு , தன் துணையுடன் ஜாலியாக வாழும் என்பது இதற்கு அர்த்தம்.

அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல… இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் ஆச்சரியம்..

 

கவரிமா என்பது மான் வகையை சார்ந்தது அல்ல.. மாடு வகையை சார்ந்தது என்பது அடுத்த ஆச்சரியம்..

 

 

வள்ளுவர் சொன்னது என்னைத்தான் !!
நான் புள்ளிமான். கவரிமான் அல்ல

இந்த கவரி மா குறித்து பதிற்று பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன.

முடி சடை போல தொங்க கூடிய விலங்குதான் கவரிமா… இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்..

கவரி என்பதில் இருந்துதான் சவரி முடி என்ற இன்றைய்  சொல் உருவானது..

மா என்பது மிருகங்களுக்கு உரிய பொதுவான சொல். ( அரிமா அரிமா என்ற எந்திரன் பாடலை நினைவு படுத்தி கொள்ளலாம்.. அரிமா=சிங்கம் )

சரி..

இந்த குறளுக்கு அர்த்தம் என்ன?

பனி பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு , அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது..

அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்..

அதே போல சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு பங்கம் வந்து விட்டால், அவர்கள் வாழ்வது சிரமமாகி விடும்…

கலைஞர் தன் உரையில் கவரிமான் தன் முடியை இழந்தால் உயிர் வாழாது என சொல்லப்படுகிறது…அதே போல மானம் மிக்க மனிதர்களும், மானம் இழந்து உயிர் வாழ மாட்டார்கள் என்று விளக்கம் அளிக்கிறார்..

சரியான விளக்கம்.. கவ்ரிமான் , கவரிமா சர்ச்சையில் அவர் சிக்காதது ரசிக்கதக்கது….

 

எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை..

பெரும்பாலானான உரைகளும் தவறு இல்லை..

 

ஆனால் கவரிமா வை கவரிமான் என புரிந்து கொள்வது தவறு..

 

This entry was posted in Uncategorized and tagged , , . Bookmark the permalink.

3 Responses to கவரிமான் தற்கொலை செய்யுமா? – ஆச்சரியமூட்டும் தகவல்கள்

  1. greatppr says:

    Nice explanation. Thank you.

  2. நன்றி… உண்மையில் பலருக்கு தெரியாத தகவல் இது.

  3. Tamil says:

    Wonderful!

Leave a comment