கமல் அவர்களே.. ஏன் இந்த வக்கிரம்? ஏன் இந்த குரூரம்?- சாரு நிவேதிதா ஆவேசம்லட்சக்கணக்கான குழந்தைகள் இன்று குழந்தை தொழிலாளர்களாக வதைபட்டுக்கொண்டு இருக்கின்றனர். உணவு விடுதிகள் , கடைகள் , தீப்பெட்டி தொழிற்சாலைகள் , பீடி சுற்றும் இருட்டு கிடங்குகள், சிவப்பு விளக்கு பகுதிகள், பட்டறைகள் , தொழிற்சாலைகள் என பல இடங்களிலும் குழந்தைகள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் அரசாங்கம் ( இதில் போலீசும் அடக்கம் ) , முதலாளிகள் மற்றும் இதை எல்லாம் கண்ணிருந்தும் காணாமல் நம் வீட்டு குழந்தைகளுக்கு நெய்ச்சோறு ஊட்டி கொண்டு இருக்கும் முடில் கிளாஸ் ஆசாமிகளாகியா நாம்.
ஆக, லட்சக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் தங்கள் சந்தோஷத்தை இழந்து, விளையாட்டை இழந்து , கதைகளை இழந்து , பாட்டையும் கூத்தையும் இழந்து , நிலா சோற்றை இழந்து குழந்தை தொழிலாளர்களாக அடிமைப்பட நேர்ந்து இருக்கும் இந்த பூமி இருந்தால் என்ன ; சுக்கு நூறாய் வெடித்து சிதறினால்தான் என்ன என்கிற கோபம் அணுவளவும் இல்லாமல் இல்லாமல் , நம் வீட்டு குழந்தைகளின் டைகளை சரி செய்து கொண்டு இருக்கும் நாம், இப்படிப்பட்ட நிலமையை சரி செய்ய வேண்டுமென நம்பி ஆயுதங்களை கையில் எடுப்பவர்களை பார்த்து பொறுக்கி என்று சொன்னால் நாம் யார் ? நம்முடைய அடையாளம் என்ன ? வரலாற்றில் நமக்குரிய தண்டனை என்ன?

கற்பழிப்பு என்பது காவல் நிலையங்களின் அன்றாடப்பணிகளில் ஒன்றாக ஆகிபோய் விட்டது. இவர்களுக்கு எதிராக பொது மக்கள் எதுவும் செய்ய முடியாது. அமுல் டப்பாவில் பூச்சி இருந்தால் நுகர்வோர் நீதிமனறத்துக்கு போகலாம். ஆனால் ஒரு பெண்ணை நான்கு போலீசார் கற்பழித்தால் நீதிமன்றம் போக முடியாது. சாட்சியம் வேண்டும். இந்த நிலைமைகளில் இம்மாதிரி சம்பவங்களுக்கு
எதிராக போராட்டம் நடத்தி அதிரடி நடவடிக்கைகளில் இறக்குபவர்கள் போராளிகள்தாம் . நாம் அல்ல.

நமக்கு எல்லாமே வெறும் பேப்பர் செய்திகள் ! நிலைமை இப்படி இருக்க , போலீஸ்காரர் வேஷத்தில் வரும் கமல்ஹாசன் , ஓர் ஆயுதப்போராளியை கற்பழிப்பவனாகவும் , காம வெறியனாகவும் காட்டி இருக்கிறார். கற்பழித்தவர்களை அடையாளம் காட்ட சொல்லி ஆதிவாசி பெண்களுக்கு முன்னால் போலீஸ்காரர்களை அணிவகுப்பு நடத்தி காண்பித்து கொண்டிருக்கும் தேசம் நமது தேசம் ! இங்கே போய் போராளிகள்தான் கற்பழிப்பவர்கள் என்று சொல்வதென்றால் அதை வெறும் திமிர் என்று மட்டுமே வர்ணிக்கலாம்.

போராளிகள் என்பவர்களை ஏதோ அந்த கால நம்பியாரின் அடியாட்களை போல் சித்தரித்து இருக்கிறார் கமல்ஹாசன். நம்பியாரிடம் கொஞ்சம் நஞ்சம் நளினம் மென்மை உண்டு. வீரப்பா, ராஜனளா, அசோகன் போன்றவர்களைத்தான் போராளிகளுக்கான மாடலாக எடுத்துக்கொண்டு இருக்கிறார் கமல்.

போராளிகள் கீழ்சாதிக்காரர்கள்; மலமும் சோறும் அவர்களுக்கு ஒன்றுதான் ; அவர்கள் அவலட்சணமானவர்கள் ; அசுத்தமானவர்கள் என்பதான பிம்பம்தான் படத்தின் பல காட்சிகளில் மக்கள் மனதில் பதிய வைக்கப்படுகிறது.

ஒரு காட்சியில் போராளி அவன் மனைவியின் ஜாக்கெட்டுக்குள் ஐந்து ரூபாய் நோட்டை திணிக்கிறான்.
ஒரு போராளியின் மனைவியைகூட வேசி போல தான் சித்தரிக்க வேண்டுமா? ஏன் இந்த வக்கிரம்? ஏன் இந்த குரூரம்? ஆனால் அவள் மார்க்கேஸ் படிக்கிறாள். அந்த மார்க்கேஸ் தான் பெற்ற நோபல் பரிசி தொகையை தன் நாடான கொலம்பியாவின் ஆயுதமேந்திய போராளிகளுக்குத்தான் கொடுத்தார் என்பது கமலுக்கு தெரியுமா?

Get the devil its due என்பார்கள். நமக்கு பிடிக்காவிட்டாலும் கூட நமது எதிரிக்கு உரித்தான தனிதன்மைகளை நாம் அங்கீகரித்துதான் ஆக வேண்டும். ரோஜா என்ற படம் முழுக்கவும் ஆர் எஸ் எஸ் இந்துத்துவ தேசியவாதா படமாக இருந்தாலும் கூட அதில் காஷ்மீர் விடுதலை போராளிகளின் பார்வை மிக அழுத்தமாக முன்வைக்கப்பட்டு இருந்தது . “ ஏன் இந்த படுகொலைகள் , ஏன் இந்த ரத்தம் ? “ என போராளி குழுவின் தலைவனிடம் கேட்கும்போது அவன் சொல்கிறான் “ இது எங்கள் விடுதலைக்காக. இந்த மண்ணின் லட்சக்கணக்கான மக்களின் விடுதலைக்காக. இந்த மண்ணின் மலைகள், மரங்கள், செடி கொடி பூண்டுகள், நதிகள் இவற்றின் விடுதலைக்காக.. அஸாதி அஸாதி “ என்று உணர்வுபூர்வமாகவும் ஆக்ரோஷமாகவும் தங்கள் போராட்டத்தை நியாயப்படுத்துகிறான்.
ஆனால்,
தங்களின் சுகதுக்கங்கள் அனைத்தையும் இழந்து தங்களின் மரணத்தை கூட முதுகிலேயே சுமந்துகொண்டு காடுகளில் போராடிகொண்டு இருக்கும் போராளிகள் என்ன நினைக்கிறார்கள்; அவர்கள் நியாயம் என்ன கொள்கை கோட்பாடுகள் என்ன் என்பது பற்றிய சிறு சலனம் கூட குருதி புனலில் கிடையாது.
இருப்பதெல்லாம் கமல்ஹாசனின் அலட்டல் பார்வைகள் , அரை வேக்காட்டுதத்துவங்கள்தான். போராளிகளின் தலைவன் பத்ரியை அடித்து காக்காய் வலிப்பு வந்தவனைப்போல கழுத்தை வெட்டி இழுக்கிறார் கமல்,. ஒரே கரகோஷம் !

கடைசி காட்சியில் , ஆதியின் மகன் போராளிகளின் பிள்ளைகளை ஒழித்து கட்டுவேன் என்று சொல்வதோடு படம் முடிகிறது.
30 ரூபாய் வார கூலிக்கு தினம் 12 மணி நேரம் வேலை செய்யும் குழந்தைகள் கொத்தடிமைகளாகவே இருப்பார்கள். ! இதை எதிர்ப்பவன் ”பொறுக்கி ”! இந்த “பொறுக்கி”களை தீர்த்துக்கட்ட ஆதியின் குழந்தைகளுக்கு போலீஸ் பயிற்சி !

அரசுதான் மக்களை ஒடுக்கி கொண்டு இருக்கிறது. எதிர்த்து கேட்பவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு கொண்டு இருக்கிறது. அரசாங்கத்தில் இருப்பவர்கள் கோடி கோடியாக கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் இதுதான் பயங்கரவாதம். இந்த பயங்கரவாதத்துக்கு எதிராக எழுதுகோலையோ ஆயுதங்களையோ எடுப்பவர்களை பொறுக்கி என்றும் பயங்கரவாதி என்றும் சொன்னால் , அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலை பேசிகிறார்கள் என்றே அர்த்தமாகும்

 

Advertisements
This entry was posted in Uncategorized and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s